tomato fever in kerala : தக்காளி காய்ச்சலால் தமிழகம் பாதிக்கப்படுமா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவுவது பெரிய அளவில் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்தில் முதன்முறையாக சர்க்கரை நோய் பரிசோதனைத் திட்டத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார். வலங்கைமான் தாலுகாவிற்குட்பட்ட கோட்டையூர் ஊராட்சியில் முன்னதாக அமைக்கப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… ”கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், கேரள – தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு பணியும் நடைபெறாமல் மருத்துவமனை சீரழித்தனர். இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும், இதய நோய் சிகிச்சைக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட இந்த தீவிர சிகிச்சை பிரிவு ரூ.23.75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திருவீழிமிழலை, வடுவூர், முத்துப்பேட்டை, வட்டார அளவில் பொது சுகாதார நிலையங்கள் ரூ. 3.23 கோடி. திருவாரூரில் இரண்டு துணை சுகாதார நிலையங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ளன. தலா 32 லட்சம்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வக பரிசோதனைக்காக ரூ.8.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 60 துணை சுகாதார நிலையங்களை நலவாழ்வு மையங்களாக மாற்ற, 17 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார்.